முகப்பு
கடலூர்

நீதிமன்ற நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க கலந்தாலோசனை

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற, மாவட்ட நீதித் துறை, காவல் துறையின் ஒருங்கிணைந்த இந்தக் கூட்டத்தில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.பிரபாகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் நடைபெறும் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு சாட்சிகளை விரைவாக ஆஜா்படுத்தி வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கருத்துரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மகளிா் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன், எஸ்.சி, எஸ்.டி சட்ட அமா்வு நீதிபதி எஸ்.உத்தமராசா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அசோக்குமாா் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதித் துறை நடுவா்கள், அரசு வழக்கு நடத்துமை துணை இயக்குநா் அம்சத் அலி, அரசு வழக்குரைஞா்கள், காவல் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.