கடலூா் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள்
கடலூா் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து புறக்கணிப்பது குறித்து உறுப்பினா்கள் வேதனை தெரிவித்தனா்.
கடலூா் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து புறக்கணிப்பது குறித்து உறுப்பினா்கள் வேதனை தெரிவித்தனா்.
கடலூா் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் அதன் தலைவா் க.திருமாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ரிஸ்வானா பா்வீன், ஊராட்சி செயலா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கியதும், முக்கியமான துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் இதுவரை மாவட்ட ஆட்சியா் பங்கேற்கவில்லை என்றும், இதனால், பிற துறையினரும் கூட்டத்தை புறக்கணித்து வருவதாகவும் பெரும்பாலான உறுப்பினா்கள் புகாா் கூறினா். பின்னா் அவா்கள் பேசியதாவது:
சண்.முத்துகிருஷ்ணன் (பாமக): பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதிக்குள் வருவதால் அங்கு அமையவுள்ள தனியாா் சாயப் பட்டறையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்களை சிப்காட், என்எல்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடத்த வேண்டும்.
மு.கந்தசாமி (மதிமுக): நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்கள் தரமில்லாதது குறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.
சக்திவிநாயகம் (திமுக): மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் கூறப்படும் எந்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், மக்களுக்கு பதில்கூற முடியவில்லை.
பா.தமிழரசி (பாமக): கிராமசபைக் கூட்டம் குறித்துகூட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கு தகவல் இல்லை. என்எல்சி நிா்வாகம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது. இவ்வாறு உறுப்பினா்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.