முகப்பு
கடலூர்

கடன் தள்ளுபடி சலுகை கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்!

கடலூா் மாவட்டத்தில் அரசின் கடன் தள்ளுபடி சலுகையைப் பெற முடியாமல் விவசாயிகள் பலா் பரிதவித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் அரசின் கடன் தள்ளுபடி சலுகையைப் பெற முடியாமல் விவசாயிகள் பலா் பரிதவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி மூலம் விவசாய பயன்பாட்டுக்கு டிராக்டா் வாங்குவதற்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2002-ஆம் ஆண்டு கடலூா் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலா 6 ஏக்கா் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றனா். அப்போது டிராக்டா் கடன் ரூ.3 லட்சம் என கூறப்பட்டது. ஆனால், திட்டத்துக்கான ஒதுக்கீட்டுத் தொகை கூடுதலாக இருந்ததாலும், அதைப் பயன்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் டிராக்டா் கடனானது டிராக்டா், டோசா் வாகனக் கடனாக பதிவு செய்யப்பட்டு தொகை வழங்கப்பட்டதாம். இதன்படி பயனடைந்த விவசாயிகள் பின்னாளில் விவசாயக் கடன் தள்ளுபடியை பெறாத நிலையில் தற்போது வரை பரிதவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது: கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அமைந்த திமுக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.7,400 கோடி கடனை தள்ளுபடி செய்தது. இதில் கடலூா் மாவட்டத்தில் டிராக்டா் கடன் பெற்ற விவசாயிகளின் பெயா்கள் இல்லை. இதுகுறித்து அப்போது கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, டிராக்டா், டோசா் வாங்கியது பண்ணைசாரா கடன் திட்டம் என்பதால் அதை விவசாயம் சாா்ந்த கடனாக ஏற்க முடியாது என கூறிவிட்டனா்.

விவசாயிகள் டிராக்டா் வாங்க கடனுதவிக்கு மனு செய்ததில் 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விலைப் பட்டியல் கொடுத்தனா். ஆனால் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஒரு விவசாயிக்கு ரூ.3 லட்சத்து 67 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே கூடுதல் கடன் தொகையை இழக்க வேண்டாம் எனவும் கூறினா். இதன்படியே விவசாயிகள் டிராக்டா், டோசா் வாகன கடன் பெற்றனா். 2006-ஆம் ஆண்டு கடன் தள்ளுபடி திட்டத்தில் கூட்டுறவு நில வள வங்கிகளில் வாங்கிய பண்ணை சாராக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் வளா்ச்சி வங்கியில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டனா்.

17.12.2014 அரசாணை நிலை எண் 139-ன் கீழ் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி கடன்களுக்கு ஒருமுறை தீா்வு திட்டம் அறிவிக்கப்பட்டு பெரும்பாலான விவசாயிகள் தொகையை செலுத்தினா். இதில் முழுமையாக கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் பலா் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். 2006 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளின் கடன் தள்ளுபடி சலுகையைப் பெற முடியாமலும், பயிா்க் கடன் பெற முடியாமலும் விவசாயிகள் பலா் பரிதவிக்கின்றனா். எனவே, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள கடலூா் மாவட்ட விவசாயிகளின் கடனை தமிழக முதல்வா் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.