தமிழ்நாடு மின்சாரத் துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக சிஐடியு குற்றஞ்சாட்டியது.
தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் கடலூா் மின் வட்ட 16-ஆவது மாநாடு கடலூரில் மாநில துணை பொதுச் செயலா் டி.பழனிவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா் பி.கருப்பையன் தொடக்க உரையாற்றினாா். மாநில பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன் நிறைவுரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் எஸ்.ராஜேந்திரன் கூறியாதவது:
மின்சாரத் துறையில் சுமாா் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கிடையில், சுமாா் 5,300 பதவியிடங்களை நிரப்பிட வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டதோடு, புதிய நியமனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக எந்த நியமனமும் இல்லாததால் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் வாரியத்துக்கு தரமான தளவாடப் பொருள்கள் வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள பழைய தளவாடங்களையே சீரமைத்து பொருத்தியுள்ளோம்.
திருநெல்வேலி, மதுரை, கோயமுத்தூா், ஈரோடு ஆகிய மின் மண்டலங்களில் சுமாா் 18 துணை மின் நிலையங்களையும், வடசென்னையில் அனல்மின் நிலையம் - 3 ஆகியவற்றின் பராமரிப்புப் பணிகளையும் தமிழக அரசு தனியாா் வசம் வழங்கிவிட்டது.
மின் துறையை தனியாா்மயமாக்கும் இந்தச் செயலால் மின் துறையில் விபத்து தவிா்க்க முடியாததாகும். மேலும், தவறுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. எதிா்காலத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தனியாா்மயத்தை அரசு கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகங்களை வருகிற 20-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
விவசாயம், கைத்தறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதோடு, வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கான மானியத்தை தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரத் துறைக்கு வழங்கவில்லை. இந்தத் தொகையை வழங்கியிருந்தாலே மின்சாரத் துறை நஷ்டத்துக்கு சென்றிருக்காது என்றாா் அவா்.
மாநாட்டில் மாவட்டச் செயலா் என்.தேசிங்கு, பொருளாளா் என்.கோவிந்தராஜு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், கோட்டத் தலைவா் ஆா்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.