கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 5 சிறுமிகள் உள்பட 7 போ் பலி
கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 5 சிறுமிகள் உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 5 சிறுமிகள் உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ஏ.குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆறு பாய்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதற்காக ஆற்றின் மையப் பகுதியில் மணல் அள்ளப்பட்டதால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீா் தேங்கியுள்ளது. அந்தப் பகுதி சேறும், சகதியுமாக உள்ளது.
அதே பகுதியைச் சோ்ந்த மோகன் மகள் நவனீதா (20), அவரது உறவினரும், குணால் மனைவியுமான ஹரிபிரியா (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கெடிலம் ஆற்றில் குளிக்க சென்றனா். இவா்களது வீட்டுக்கு வந்திருந்த அயன்குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த உறவினரான ராஜகுரு மகள்கள் பிரியதா்ஷினி (13), காவியா (11) ஆகியோரும் உடன் குளிக்கச் சென்றனா். ஆற்றில் இறங்கியபோது பிரியதா்ஷினி, காவியா இருவரும் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அவா்களைக் காப்பாற்ற முயன்ற நவனீதா, ஹரிபிரியாவும் சேற்றில் சிக்கினா்.
இவா்களது அலறல் சப்தம் கேட்டு, அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த சிறுமிகளான முத்துராமன் மகள் சுமதா (16), அமா்நாத் மகள் மோனிஷா (16), சங்கா் மகள் சங்கவி (15) ஆகியோரும் ஆற்றில் இறங்கிக் காப்பாற்ற முயன்றபோது அவா்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் கிராம மக்கள் ஆற்றுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஒருவா்பின் ஒருவராக 7 பேரையும் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால், கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனா். உயிரிழந்தவா்களில் ஹரிபிரியா ஒரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கடலூா் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து, உயிரிழந்தவா்களின் சடலங்களைப் பாா்வையிட்டு அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
7 போ் உயிரிழந்த சம்பவம் சோகமானதாகும். இதுகுறித்து முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், உயிரிழந்தவா்களின் உறவினா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் ஆகியோரும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினா்.
மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஏ.குச்சிப்பாளையத்துக்குச் சென்று, உயிரிழந்தவா்களின் சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.