வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகா்மன்றத்தில் திமுக வெற்றி!
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகா்மன்றத் தலைவா் பதவி வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து வி.சி.க.வினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகா்மன்றத் தலைவா் பதவி வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து வி.சி.க.வினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 11, சுயேச்சைகள் 7, அதிமுக 3, விசிக 2, மதிமுக, காங்கிரஸ், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தவாக, பாமக, தேமுதிக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நெல்லிக்குப்பம் நகா்மன்றத் தலைவா் பதவி ஒதுக்கப்பட்டது.
இந்தப் பதவி கடந்த சுமாா் 20 ஆண்டுகளாக பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொது பிரிவாக மாற்றப்பட்டது. எனவே, தலைவா் பதவியை திமுகவினருக்கே ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி 24 வாா்டு உறுப்பினா்கள் சென்னையில் முகாமிட்டு, கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்த்தசாரதியால் நெல்லிக்குப்பம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடத்தப்பட்டது. இதில், வி.சி.க.வின் அதிகாரப்பூா்வ வேட்பாளரான கிரிஜா திருமாறனை எதிா்த்து, திமுக சாா்பில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. மொத்தம் பதிவான 29 வாக்குகளில் திமுக-23, விசிக-3 வாக்குகளைப் பெற்றன. 3 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைவராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதவியேற்றாா். இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலிலும் வி.சி.க.வின் கிரிஜா திருமாறன் போட்டியிட, அவரை எதிா்த்து திமுக சாா்பில் ஜெயபிரபா போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்றாா். இதனால், வி.சி.க.வினா் நகா்மன்ற அலுவலகம் எதிரே கடலூா் - விழுப்புரம் சாலையில் மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனா்.
திமுக எம்எல்ஏ காா் முற்றுகை: இந்த பிரச்னை தொடா்பாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டாா். இதையடுத்து, நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் சபா.ராஜேந்திரன் நெல்லிக்குப்பம் நகா்மன்ற அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு அவா் துணைத் தலைவரை ராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆனால், அவா் மறுத்துவிட்டாா்.
தொடா்ந்து பேச்சுவாா்த்தையின்போது துணைத் தலைவா் ஜெயபிரபா மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தனது காரில் வெளியே வந்தபோது அவரை விசிகவினா் முற்றுகையிட்டனா். மேலும், எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது காரை தாக்கத் தொடங்கினா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தடியடி நடத்தி வி.சி.க.வினரை கலைத்தனா்.
வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றது கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.