கடலூர்

விட்டுக்கொடுக்காத திமுக: இறங்கி வந்த விசிக; நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் ராஜினாமா

DIN

கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விலக மறுத்த நிலையில் துணைத் தலைவர் பதவி விலகினார். 

கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றதில் 21 உள்ளாட்சி அமைப்புகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளே அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றன. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டணிக் கட்சியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட திமுக தலைமை முடிவெடுத்து கடலூர் மாநகராட்சி துணைத் தலைவர் பதவியை விசிகவிற்கு வழங்கியது.

மேலும், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை விசிகவிற்கும், சிதம்பரம் துணைத் தலைவர் பதவியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பேரூராட்சிகளில் தலைவர் பதவியிடம் மங்கலம்பேட்டை காங்கிரஸ் கட்சிக்கும், பெண்ணாடம் விசிகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவர்களில் புவனகிரி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது.

இவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. விசிக வேட்பாளரால் 3 வாக்கு மட்டுமே பெற முடிந்தது. இதேப்போன்று, மங்கலம்பேட்டை பேரூராட்சியை காங்கிரசுக்கு வழங்காமல் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவ்வாறு, கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டது கூட்டணிக் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது. அதேநேரத்தில் கடலூர் மாநகராட்சியில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளரும், பண்ருட்டி நகராட்சியிலும் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரும் களம் கண்டனர். இதில், கடலூர் மாநகராட்சியில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் வென்ற நிலையில், பண்ருட்டியில் போட்டி வேட்பாளரான நகர செயலாளர் இராஜேந்திரன் வெற்றி பெற்றார். இது, திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட பதவியிடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மங்கலம்பேட்டை திமுக தரப்பினர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் 14 ஆவது வார்டில் திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராகவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கூட்டணி தர்மப்படி இது எப்படி நியாயமாகும்.

அதே நேரத்தில் 8 ஆவது வார்டில் சம்சாத்பேகம் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவரது குடும்பம் திமுக பாரம்பரியத்தைச் சேர்ந்ததாகும். சம்சாத் பேகத்தின் மாமனார் எம்.ஏ.பாரி தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக இருந்ததோடு, கட்சியின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தவர். இவரது மனைவி மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். அடுத்ததாக இவரது மகன் பாரிமுஹம்மது இப்ராஹிம் திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரும், ஒருமுறை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இவ்வாறு, இக்குடும்பத்தினர் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த நிலையில் தற்போது திமுக கட்சியினர் மட்டுமின்றி சுயேச்சைகளின் ஆதரவையும் பெற்று தலைவராக தேர்வாகியுள்ளார். எனவே, இவரே தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், நெல்லிக்குப்பம் நகராட்சியின் தலைவராக 29 ஆவது வார்டு கவுன்சிலர் இரா.ஜெயந்தி தேர்வாகியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நகராட்சியின் தலைவர் பதவியிடம் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடாகவே இருந்து வந்துள்ளது. இத்தேர்தலில் தான் பொது பிரிவிற்கு மாறியதால் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் தேர்தலில் களம் கண்டனர். ஆனால், கடைசி நேரத்தில் தலைமை இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டதால் அதிருப்தியில் உள்ளோம் என்றனர்.

அதேநேரத்தில் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் மதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர். கட்சியில் எந்தவிதமான பொறுப்பும் வகிக்கவில்லை. மேலும், நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் தாராளமாக தேர்தலை சந்தித்தவர். இதனால், தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. 

இதனால், அமைச்சர் சி.வெ.கணேசன் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பது என்று முடிவாகியது. இதனையடுத்து, துணைத் தலைவராக பொறுப்பேற்ற திமுகவின் நகர செயலாளர் மணிவண்ணன் மனைவி ஜெயபிரபா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர், திங்கள்கிழமை இரவில் அமைச்சர் சி.வெ.கணேசனை சந்தித்து தான் ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை வழங்கினார். பின்னர், சென்னையில் தொல்.திருமாவளவனை சந்தித்தனர்.
நகராட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க திமுக மறுத்து வந்ததால் வேறு வழியின்றி துணைத் தலைவர் பதவியை விசிக பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், கடலூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தியதாக கடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், போட்டி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி நகர செயலாளரும் பண்ருட்டி நகராட்சி தலைவருமான ஆர்.ராஜேந்திரன் அப்பொறுப்பில் தொடர்கிறார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் இரா.ஜெயபிரபா, மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் சம்சாத் பேகம் ஆகியோர் பதவி விலக மறுப்பதும் திமுக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT