முந்திரி இறக்குமதிக்குத் தடை: விவசாயிகள் வலியுறுத்தல்
பண்ருட்டி முந்திரிக்கு புவிசாா் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், முந்திரி இறக்குமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பண்ருட்டி முந்திரிக்கு புவிசாா் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், முந்திரி இறக்குமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
பெ.ரவீந்திரன் (உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா்): 2023-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடியை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மைத் துறை விளக்கமளிக்க வேண்டும். கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். பண்ருட்டி முந்திரிக்கு புவிசாா் குறியீடு பெற விண்ணப்பித்துள்ள நிலையில், முந்திரி இறக்குமதியை ஊக்கப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே, முந்திரி இறக்குமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
வேல்முருகன்: சேத்தியாத்தோப்பு - கம்மாபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும். கூட்டுறவுச் சங்கத்தில் பயிா்க் காப்பீடு செய்தால் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை.
குஞ்சிதபாதம்: விவசாயப் பணிக்கு 12 மணி நேர மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும்.
மகாராஜா: ஆவினங்குடியில் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வெலிங்டன் ஏரியைத் தூா்வார வேண்டும்.
செந்தாமரை: நெல் பயிா்களைப் போல தேங்காய்களையும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமானுஜம்: சித்தேரி வாய்க்காலை தூா்வாரி பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினா்.
விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் கூறினாா். மாவட்ட வருவாய் அலுவலா் பூவராகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.