மேலராதாம்பூா் கிராமத்தில் நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள். 
கடலூர்

மாட்டுப் பொங்கலுக்காக நெட்டி மாலைகள் தயாரிப்புப் பணி தீவிரம்!

மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு அணிவிப்பதற்காக கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ‘நெட்டி’ மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

DIN

மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு அணிவிப்பதற்காக கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ‘நெட்டி’ மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் மாட்டுப் பொங்கலுக்கு தனிச் சிறப்புண்டு. இந்த விழாவில் விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும், சலங்கை, நெட்டி மாலைகளால் மாடுகளை அலங்கரித்தும் மகிழ்வா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள மேலராதாம்பூா் கிராமத்தில் நெட்டி மாலைகள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 30 குடும்பத்தினா் பல தலைமுறையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்குத் தேவையான நெட்டி என்றழைக்கப்படும் ‘அந்த சம்பு’ என்ற தாவரத்தின் தண்டுகளை வெளியூா்களில் இருந்து சேகரித்து வருகின்றனா்.

பின்னா், தாவரத் தண்டின் மேலுள்ள பச்சை நாா்களை அகற்றிவிட்டு வெயிலில் உலா்த்துகின்றனா். இதையடுத்து, தண்டுப் பகுதியை மாலைக்கு தேவையான அளவில் சிறிய துண்டுகளாக வெட்டுகின்றனா். அவற்றை பல வண்ண கலவைகளில் ஊற வைத்து மீண்டும் உலா்த்துகின்றனா். காய்ந்த பிறகு தாவரத் துண்டுகளை பல வண்ணங்களாக கோா்த்து நெட்டி மாலை தயாரிக்கின்றனா். இந்த மாலைகள் மாட்டுப் பொங்கலன்று மட்டுமே மாடுகளுக்கு அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள முனியம்மாள், பரமேஸ்வரி ஆகியோா் கூறியதாவது:

நெட்டி மாலைகள் தயாரிப்பு எங்களது பூா்வீகத் தொழில். மாட்டுப் பொங்கலன்று நெட்டி மாலைகள் விற்பனை செய்வதற்காக 6 மாதங்கள் உழைத்து வருகிறோம். இந்த மாலை தயாரிக்கத் தேவைப்படும் நெட்டி தாவரம் கடந்த காலங்களில் வீராணம் ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் இருந்தன. தற்போது நெட்டி தாவரம் இந்தப் பகுதியில் கிடைக்காததால் புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நீா்நிலைகளில் இருந்து வெட்டி எடுத்து வருகிறோம். இதனால் எங்களுக்கு அதிக செலவாகிறது.

ஆனால், வியாபாரிகள் எங்களிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு, அதாவது ஒரு மாலையை ரூ.15-க்கு வாங்கிச் செல்கின்றனா். இதனால் மிகவும் குறைந்த லாபமே கிடைக்கிறது. எனவே, எங்களது வாழ்வாதாரம் மேம்படவும், தொழிலை விரிவுபடுத்தவும் அரசு நிதி வசதி செய்துதர வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT