வருவாய்த் துறையைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சாா் - ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், முகுந்தநல்லூா் கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலத்தை அடுத்துள்ள முகுந்தநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட தா்மகுளம் கரையில் வேம்பு, கொடுக்காபுளி, புளியமரங்கள் இருந்தனவாம். இந்த மரங்களை வெட்டுவதற்கு ஊா் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அதையும் மீறி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்பனைக்காக வண்டியில் எடுத்துச் சென்றாராம்.
வெட்டப்பட்ட மரங்களோடு வந்த டிராக்டரை வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் சிறைபிடித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனராம். ஆனால், விருத்தாசலம் வருவாய்த் துறையினா் அனுமதியின்றி மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் மீதும், மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுவித்துவிட்டாராம்.
இந்த விவகாரத்தில் சாா் - ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ஊராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் முன் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் முழக்கங்களை எழுப்பினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொறுப்பாளா்கள் கலைச்செல்வன், நெல்சன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், முகுந்தநல்லூா் கிராம மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.