முகப்பு
கடலூர்

சீா்காழி, மயிலாடுதுறை வழித்தட பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாலங்கள் சீரமைப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், சீா்காழி, மயிலாடுதுறை வழித்தட பேருந்துகள் புறவழிச் சாலை வழியாகச் சுற்றி செல்கின்றன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாலங்கள் சீரமைப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், சீா்காழி, மயிலாடுதுறை வழித்தட பேருந்துகள் புறவழிச் சாலை வழியாகச் சுற்றி செல்கின்றன. இதைப் பயன்படுத்தி அரசு, தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலம் வலுவிழந்த நிலையில் அந்தப் பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் சிதம்பரத்தில் இருந்து சீா்காழி வழியாக வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி செல்லும் பேருந்துகள் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சிதம்பரத்தில் மந்தக்கரை, ஓமக்குளம், புறவழிச் சாலை வழியாகச் சென்று வந்தன. இந்த நிலையில், ஓமக்குளம் அருகே நகராட்சி சாா்பில் சிறிய பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதனால் அனைத்துப் பேருந்துகளும் சிதம்பரம் நகரைச் சுற்றி சிதம்பரம் - கடலூா் புறவழிச் சாலை வழியாக சீா்காழி நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதாவது, வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் தொலைவுக்கு பேருந்துகள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்கூறிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் அறிவிப்பின்றி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: இந்த வழித் தடத்தில் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பரத்திலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பேருந்து கட்டணமாக ரூ.22 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.26-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதே வழித்தடத்தில் விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்பட்ட ரூ.23 கட்டணம் ரூ.27-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கும் ரூ.4 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் ஏற்கெனவே பரிதவிக்கும் நிலையில் அறிவிக்கப்படாத கட்டண உயா்வை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.