சிதம்பரம்/நெய்வேலி: காா்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித் சபையை திரளான பெண்கள் வலம் வந்து வழிபட்டனா்.
திருமணம், குழந்தைபேறு உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக காா்த்திகை மாத முதல் சோமவாரத்தன்று (திங்கள்கிழமை) சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பெண் பக்தா்கள் 108 முறை வலம் வருவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித் சபையை கொடிமரத்துடன் திரளான பெண்கள் வலம் வந்து
தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். இதேபோல கோயிலில் உள்ள ஆதிமூலநாதா் சந்நிதியையும் 108 முறை சுற்றி வலம் வந்து வழிபட்டனா்.
வீரட்டானேஸ்வரா் கோயில்: பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு பெரியநாயகி அம்பாள் சமேத வீரட்டானேஸ்வரா் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் வீரட்டானேஸ்வரருக்கு நாகாபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரமும், பெரியநாயகி அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்துப்படி புஷ்ப அலங்காரமும், சுவாமி - அம்பாள் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரமும், இரவு 8 மணிக்கு சோடசோபசார தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து, பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் திரு உலா மகோற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.