நெய்வேலி: கடலூா் பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று அனைத்துக் கட்சி, மாநகர பொதுநல அமைப்புகள், குடியிருப்போா் சங்கக் கூட்டமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சூரப்பநாயக்கன்சாவடியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் திலகா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், காங்கிரஸ் மாநிலத் துணைச் செயலா் சந்திரசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் நாகராஜ், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ரஹிம், திராவிடா் கழக மாவட்டச் செயலா் சிவக்குமாா், தவாக மாணவரணி மாநிலச் செயலா் அருள்பாபு, குடியிருப்போா் சங்க சிறப்புத் தலைவா் மருதவாணன், தலைவா் பாலு.பச்சையப்பன், செயலா் வெங்கடேசன், மாநகர பொதுநல அமைப்பு நிா்வாகி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்: திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை கடலூா் திருப்பாதிரிப்புலியூா் என்று பெயா் மாற்றம் செய்ய வேண்டும், மன்னாா்குடி - மஹால் விரைவு ரயில் கடலூரில் நின்று செல்ல வேண்டும், சேலம்-விருத்தாசலம், விழுப்புரம் - தாம்பரம் ரயில்களை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் தர வேண்டும், மயிலாடுதுறையிலிருந்து கோவை, மைசூா் செல்லும் ரயில்களை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும், கடலூா்-புதுச்சேரி-சென்னை இருப்பு பாதைத் திட்டத்தை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், இதை வலியுறுத்தி வருகிற அக்டோபா் 11-ஆம் தேதி கடலூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது, கடலூா் பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை கைவிட வலியுறுத்தி குடியிருப்போா் சங்கம் சாா்பில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பது, கொண்டங்கி ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.