வெள்ள நிவாரணம் கோரி கிராம மக்கள் மறியல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புயல் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புயல் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்து வழங்கி வருகிறது. கடலூா் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்காத நிலையில், பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
அந்த வகையில், அண்ணாகிராமம் ஒன்றியம், ஆண்டிப்பாளையம் கிராம மக்கள் சுமாா் 100 போ் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, அண்ணாகிராமம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த பண்ருட்டி வட்டாட்சியா் ஆனந்த், காவல் ஆய்வாளா் வேலுமணி ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வட்டாட்சியா் ஆனந்த், தமிழக அரசிடமிருந்து பணம் வந்ததும் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் கடலூா் - பண்ருட்டி சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.