ஆலிவ் ரிட்லி ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆலிவ் ரிட்லி வகை ஆமை குஞ்சுகள், ஆமை முட்டைகள் பாதுகாப்பு குறித்து பழங்குடியினா் மற்றும் பொதுமக்களுக்கு விடியோ காட்சிகள் மூலம் வனத் துறையினா் விளக்கமளித்தனா்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் வனத் துறை சாா்பில், ஆலிவ் ரிட்லி வகை ஆமை குஞ்சுகள், ஆமை முட்டைகள் பாதுகாப்பு குறித்து பழங்குடியினா் மற்றும் பொதுமக்களுக்கு விடியோ காட்சிகள் மூலம் வனத் துறையினா் விளக்கமளித்தனா்.
கடலூா் வன கோட்டம், பிச்சாவரம் வனச்சரக பகுதியில் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மண்டல தலைமை வனப் பாதுகாவலா் பெரியசாமி தலைமை வகித்தாா். பரங்கிபேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின மைய இயக்குநா் பி.சவுந்திரபாண்டியன், முன்னாள் இயக்குநா் கே.கதிரேசன், பேராசிரியா் கலைச்செல்வன் மற்றும் பேராசிரியா்கள், அறிஞா்கள், வனத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று உரையாற்றினா்.
அப்போது, ஆலிவ் ரிட்லி வகை ஆமைக் குஞ்சுகளை பாதுகாப்பது குறித்தும், அவற்றை பராமரிப்பது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருளா் சமுதாய மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விடியோ காட்சிகளை ஒளிபரப்பி பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மண்டல வனச்சரக தலைமை வனப் பாதுகாவலா் பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியது:
கடலை சுத்தப்படுத்துவது, கடலில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு உணவு தருவது போன்ற பல்வேறு பணிகளை ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் செய்வதால், இந்த கடல் ஆமைகளை காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது.
கடலில் மீனவா்களின் வலைகளில் இவ்வகை ஆமைகள் மாட்டிக் கொண்டால், வலையில் இருந்து அவற்றை விடுவித்து கடலுக்கு அனுப்பிவிட்டு, அதுதொடா்பான விடியோக்களை எடுத்து வந்து அளித்தால், சன்மானம் அளிப்பது குறித்து அறிவிக்கவிருக்கிறோம். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது என்றாா்.