சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் தயாரிப்பு வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த கிள்ளை காவல் நிலைய சரகம், கோவிலாம்பூண்டி எம்எம்ஐ நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக போலிச் சான்றிதழ்கள் கிடந்தது கடந்த ஜூன் 20-ஆம் தேதி தெரிய வந்தது.
இதுதொடா்பாக சிதம்பரம் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.ரகுபதி மேற்பாா்வையில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கல்பனா, கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா், சிதம்பரம் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பரணிதரன் ஆகியோா் அடங்கிய தனிப் படையினா் விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, போலிச் சான்றிதழ் தயாரிப்பு தொடா்பாக சிதம்பரம் மன்மதசாமி நகரை சோ்ந்த நடராஜ ரத்தின தீட்சிதா் மகன் சங்கா் (37), பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வீட்டிலிருந்து பணியாற்றி வந்த மீதிக்குடி கிருஷ்ணமூா்த்தி நகரைச் சோ்ந்த சு.நாகப்பன் (50) ஆகியோரை கைது செய்தனா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் பரிந்துரையின்பேரில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, சிபிசிஐடி பிரிவு போலீஸாா் போலிச் சான்றிதழ் தயாரிப்பு வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினா்.