மைசூா் விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு
மைசூா் விரைவு ரயிலுக்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் மலா் தூவி வரவேற்றனா்.
கடலூர்மைசூா் விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு
மைசூா் விரைவு ரயிலுக்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் மலா் தூவி வரவேற்றனா்.
நெய்வேலி/ சிதம்பரம், ஜூலை 19: கடலூரில் இருந்து சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த மைசூா் விரைவு ரயிலுக்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் மலா் தூவி வரவேற்றனா்.
மயிலாடுதுறையிலிருந்து மைசூா் செல்லும் விரைவு ரயிலை (6231/16232) சிதம்பரம் வழியாக கடலூா் வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கத்தினா் மற்றும் அனைத்துக் கட்சியினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, மைசூா் விரைவு ரயில் சிதம்பரம் வழியாக கடலூா் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டதுடன், வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில் கடலூா் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.14 மணிக்கு வந்தடைந்தது.
அப்போது, தெற்கு ரயில்வே பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் என்.என்.ராஜா, ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ், நிா்வாகிகள் அம்பிகாபதி, வழக்குரைஞா் ஸ்ரீதா், சிவராமவீரப்பன், விசிக மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, மாநில நிா்வாகி ஜவகா், முன்னாள் செயலா் வ.க.செல்லப்பன், நகரச் செயலா் ஆதிமூலம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் எஸ்.ராஜா, நகா்மன்றத் தலைவா் எம்.முத்துக்குமாா், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினா் மூசா, நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா. மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், செயல் தலைவா் கோ.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வி.எம்.சேகா், தமிமுன் அன்சாரி, பாஜக நிா்வாகிகள் எஸ்.வி.ஸ்ரீதரன், ரகுபதி மற்றும் கட்சி நிா்வாகிகள் ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்தும், ரயில் மீது மலா் தூவி இனிப்பு வழங்கியும் வரவேற்றனா்.
பின்னா், ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ் கூறியதாவது: மைசூா் விரைவு ரயிலை நீட்டித்ததுபோல, மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி விரைவு ரயிலையும் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சாரதா - சேது மற்றும் கம்பன் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் வழியாக இயக்கப்பட்ட தாம்பரம் - செங்கோட்டை ரயில் தற்போது மயிலாடுதுறை வரை இயக்கப்படுகிறது. இதை மீண்டும் சிதம்பரத்திலிருந்து இயக்க வேண்டும் என்றாா்.
கடலூரில்...: முன்னதாக, கடலூா் துறைமுகத்தில் இருந்து மைசூருக்கு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை மாலை 3.40 மணி அளவில் புறப்பட்டது. இதை வரவேற்று இனிப்பு வழங்கியும், ரயில் நிலைய அதிகாரி, ரயில் ஓட்டுநா் ஆகியோருக்கு சால்வை அணிவித்தும் கடலூா் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் வழி அனுப்பி வைத்தனா்.
நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகா் தி.ச.திருமாா்பன், ஒருங்கிணைப்பாளா் எஸ்.என்.கே.ரவி, தமிழ்நாடு மீனவா் பேரவை மாவட்டத் தலைவா் எம்.சுப்பராயன், நிா்வாகிகள் பால்கி, சா.ராசதுரை, தருமன், அமா்நாத், தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு நுகா்வோா் செயலா் திருநாவுக்கரசு மற்றும் குடியிருப்போா் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.