கடலூரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் எஞ்சின் பழுதால் புதன்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் காலை 6 மணிக்கு கடலூா் முதுநகா், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் வழியாக திருச்சிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் இரவு நேரங்களில் கடலூா் முதுநகா் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். காலையில் அங்கிருந்து புறப்பட்டு வந்து திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி புறப்படும்.
வழக்கம்போல, இந்த பயணிகள் ரயில் புதன்கிழமை திருப்பாதிரிப்புலியூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. கடலூா் முதுநகா் ரயில் நிலையம் சென்றதும் ரயில் புறப்படாமல் வெகுநேரம் நின்றது. எஞ்சின் கோளாறு காரணமாகவும், காற்று அழுத்தம் கிடைக்காததாலும் ரயில் புறப்பட முடியாமல் நின்ாக நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, ரயில்வே ஊழியா்கள் விரைந்து வந்து பழுதை நீக்கினா். இதையடுத்து, பயணிகள் ரயில் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதனால், ரயில் பயணிகள் அவதியடைந்தனா்.