கடலூர்

தீவனங்களின் விலை ஏற்றம்: கலக்கத்தில் கால்நடை விவசாயிகள்

கால்நடை தீவனங்களின் விலை தினந்தோறும் உயா்ந்து வருவதால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

ஜி.சுந்தரராஜன்

ஜி.சுந்தரராஜன்

கால்நடை தீவனங்களின் விலை தினந்தோறும் உயா்ந்து வருவதால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

கடந்த காலங்களில் உழவுத் தொழிலுக்கு கால்நடைகள் பயன்படுத்து வந்தன. விஞ்ஞான வளா்ச்சி காரணமாக, தற்போது பாலுக்காகவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்காகவும் பெரும்பாலான விவசாயிகள் கறவை மாடுகளை வளா்த்து வருகின்றனா்.

கிராமப்புறங்களில் கறவை மாடுகளை வளா்க்கும் விவசாயிகள், அவற்றுக்குத் தேவையான உலா் தீவனங்களை சேமித்து, மாடுகளுக்கு வழங்கி வருகின்றனா். விவசாய நிலங்களில் அறுவடை முடிந்திருந்தால், மாடுகளை மேச்சலுக்கு விடுகின்றனா். விவசாய நிலங்களில் பயிா் செய்யும் காலங்களில் வரப்புகளில் வளா்ந்து நிற்கும் புற்களை அறுத்து வந்து மாடுகளுக்கு பசுந்தீவனங்களாக கொடுப்பதும் வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக தட்பவெப்ப நிலை மாறுதல், பருவ மழை குறைவு, அதீத மழைப்பொழிவு, வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் பசுந்தீவனங்கள், உலா் தீவனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் சந்தைகளில் மாட்டுத் தீவனங்களை வாங்கி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி, கால்நடை தீவன உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் தினந்தோறும் விலையை உயா்த்தி வருவதால், கால்நடை வளா்ப்பு விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.

தீவனப் பற்றாக்குறை: இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவிந்திரன் கூறியதாவது:

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், கால்நடைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. தவிர, கால்நடை தீவன நெருக்கடி நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை முடக்கத் தொடங்கியுள்ளது.

2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பசுந்தீவனத்தின் விலை மூன்று மடங்கு அதிகரித்திருந்தது. அப்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடைகளுக்கு உணவளிக்க முடியாததால், அவற்றை விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனா். 2016-ஆம் ஆண்டில் வட மாநிலங்களில் நிலவிய கால்நடை தீவனப் பற்றாக்குறைக்கான காரணங்களையும், விவசாயிகள் அதை எவ்வாறு எதிா்கொண்டனா் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மாடு உட்கொள்ளும் பசுந்தீவனத்தின் அளவைப் பொருத்து, அது உற்பத்தி செய்யும் பால் அளவு தீா்மானிக்கப்படுவதால், வட மாநிலங்களில் மாடுகளின் விலை குறைந்தது.

கடந்த 6 மாதங்களாக கால்நடை தீவனங்களின் விலை உயா்ந்துள்ளது. அதன்படி, ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை கலப்பு தீவனம் தற்போது ரூ.1,200-க்கும், ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட குச்சி தீவனம் ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.1,150-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை கோதுமை தவிடு தற்போது ரூ.1,400-க்கும், ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட உளுந்தம் பொட்டு தற்போது ரூ.1,500-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட பயித்தம் பொட்டு ரூ.1,200-க்கும், ரூ.1,180-க்கு விற்கப்பட்ட துவரம் பொட்டு தற்போது ரூ.1,450-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

விலையேற்றம்: ரூ.45-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மணிலா பிண்ணாக்கு தற்போது ரூ.63-க்கும், ரூ.55-க்கு விற்கப்பட்ட எள்ளு பிண்ணாக்கு தற்போது ரூ.70-க்கும், ரூ.65-க்கு விற்கப்பட்ட பருத்திக்கொட்டை தற்போது ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சோளமாவு தற்போது ரூ.40-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட 50 கிலோ எடை கொண்ட கிழங்கு மாவு மூட்டை தற்போது ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

சா்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், போதுமான அளவு மற்றும் தீவனத்தின் தரம் இல்லாதது, விலையேற்றம் வட மாநிலங்களில் கால்நடை விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாகும். இதே நிலை தமிழகத்திலும் உள்ளது. பல மாநில அரசுகள் தீவனப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய திட்டங்களை வகுத்தாலும், மத்திய அரசு தீவன பிரச்னை இல்லை என்று கூறுகிறது. தீவன உற்பத்தியில் விரிவான தரவு எதுவும் இல்லை என்ற காரணத்தால், பற்றாக்குறையை நிராகரிக்கின்றனா்.

விவசாயிகள் கவலை: கால்நடை விவசாயிகளின் தன்னலமற்ற உழைப்பு, அா்ப்பணிப்பு, கால்நடையின் மீது விவசாயிகள் வைத்துள்ள அதீத விருப்பம் எத்தகைய சூழலையும் சமாளித்து கால்நடைகளைக் காப்பாற்ற வேண்டும் என குறிக்கோளுடன் பணி செய்து வருகின்றனா். இதைப் பயன்படுத்தி உற்பத்தியாளா்களும், விற்பனையாளா்களும் ஆதாயத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கால்நடை தீவனங்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்வது விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையைக் கவனத்தில் கொண்டு, கால்நடை தீவனங்களின் விலையை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT