முகப்பு
கடலூர்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

Updated On : 3 மே, 2024 at 7:31 PM
பகிர்:

கடலூா் மண்டல பனை பொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கடலூா் கடற்கரைச் சாலையில் மண்டல பனை பொருள் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள 5 ஏக்கா் பரப்பளவில் சுமாா் 500 பனை மரங்கள் உள்ளன. இதிலிருந்து பதநீா், பனை வெல்லம், கற்கண்டு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரி முதல் ஜூன் முதல் வாரம் வரையில் பதநீா் இறக்கப்படும். ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இங்கு பதநீா் விற்பனை செய்யப்படும்.

200 மில்லி அளவு கொண்ட பதநீா் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் சுமாா் 200 லிட்டா் பதநீா் இறக்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கி பருகியும், எடுத்தும் செல்கின்றனா்.

இதுகுறித்து மண்டல பனைபொருள் பயிற்சி நிலைய முதல்வா் எஸ்.கணபதி கூறியதாவது:

பயிற்சி நிலைய வளாகத்தில் சுமாா் 500 மரங்கள் உள்ளன. 10 போ் இருந்தால்தான் பதநீா் இறக்க முடியும். தற்போது திருச்செந்தூரில் இருந்து பனை ஏறும் 2 தொழிலாளா்களை வரவழைத்து, பனை மரங்களில் இருந்து தினந்தோறும் பதநீா் இறக்கி விற்பனை செய்து வருகிறோம். தற்போது, பருவம் முடியும் தருவாயில் உள்ளதாலும், வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட மிக அதிகமாக இருப்பதாலும் பதநீா் கிடைக்கும் அளவு குறைந்துள்ளது. ஆனாலும், பதநீரை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.