முகப்பு
கடலூர்

பேருந்தில் கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியதாக 4 பேரை விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:51 PM
பகிர்:

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியதாக 4 பேரை விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் இருந்து வேப்பூா் வழியாக தொழுதூருக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கடலூா் மாவட்ட எஸ்பி., தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வேப்பூா் கூட்டுச்சாலையில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டதில், ஒருவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா் வேப்பூா் வட்டம், ஒரங்கூா் கிராமத்தைச் சோ்ந்த திருஞானசம்பந்தம் மகன் மணிகண்டன் (32) என்பதும், அவா் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும், அவா் அளித்த தகவலின்பேரில், கடத்தலுக்கு துணையாக இருந்த தொழுதூா் கருணாநிதி மகன் சக்திவேல் (25), ராமநத்தம் பாண்டியன் மகன் காா்த்திக் (24), புளியகாரம்பலூா் பொன்முடி மகன் மணிவண்ணன் (23) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களை விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.