முகப்பு
கடலூர்

மழை வெள்ளம்: சென்னை சென்ற என்எல்சி மீட்புக் குழுவினா்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:55 PM
மழை வெள்ள மீட்புப் பணிக்காக சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மீட்புக் குழுவினா்.
பகிர்:

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது.

வட கிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னையில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றும் மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், என்எல்சி இந்தியா நிறுவனம், 5 சக்திவாய்ந்த 25 ஹெச்பி திறன் கொண்ட கனரக பம்புகள், உபகரணங்கள் ஆகியவற்றுடன் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் திறமையான பணியாளா்கள் அடங்கிய மீட்புக் குழுவினரை சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது.

இதற்கான நிகழ்ச்சி என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலக நுழைவுவாயில் அருகே நடைபெற்றது. நிறுவன சுரங்கத் துறை இயக்குநா் சுரேஷ் சந்திர சுமன் கலந்துகொண்டு கொடியசைத்து மீட்புக் குழுவினரை வழி அனுப்பி வைத்தாா். அப்போது, அவா் கூறியது:

என்எல்சி மீட்புக் குழுவினா் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை விரைவாக வெளியேற்றி இயல்பு நிலைக்கு கொண்டுவர பாடுபடுவா். சவாலான காலகட்டங்களில், மாநில அரசுக்கு எப்போதும் என்எல்சி இந்தியா நிறுவனம் உதவிகரமாக இருக்கும் என்றாா்.