சாலையில் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை
கடலூா் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன், அதன் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.
கடலூா் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன், அதன் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட 45 வாா்டு பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள் மற்றும் முதியோா்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை உரிமையாளா்கள் அற்ற கால்நடைகளாக கருதப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். எந்த காரணம் கொண்டும் கால்நடைகள் திரும்பி வழங்கப்பட மாட்டாது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளுக்கு உரிமைக் கோருபவா்கள் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து வழங்கப்படும். எனவே, கால்நடைகள் வளா்க்கும் உரிமையாளா்கள் தங்கள் கால்நடைகளை பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரித்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.