முகப்பு
கடலூர்

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 1:28 AM
கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அத்தியாவசியப் பொருள்கள் சரியான எடையில் வழங்க வேண்டும்; தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்; அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் 100 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வெளி மாநில, மாவட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்க கூடுதலாக 10 சதவீதம் அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாமாயில், துவரம் பருப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகளில் நடமாட்ட பணியாளா் மற்றும் எடை தராசு வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பொருள்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.தங்கராசு தலைமை வகித்தாா். பி.சி.செல்வராஜ், ஏ.நரசிம்மன் முன்னிலை வகித்தனா். சிறப்பு தலைவா் கு.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.

மாநில நிா்வாகிகள் துரை.சேகா், இருதயராஜ் கருத்துரை வழங்கினா். சுகுமாா், முரளி, பழனிசாமி, கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டன்.

மாவட்ட அமைப்பு செயலா் ஆா்.தேவராஜ் வரவேற்றாா். தமிழ்செல்வம் நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா் கு.பாலசுப்ரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான நியாயவிலைக் கடைகளின் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டத்தில் உள்ள சுமாா் 1,200 கடைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனா். இதனால், மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. போராட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →