தீபாவளி போனஸ் விவகாரம்: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா் போராட்டம்
தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழக்கக் கோரி, கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நடத்தினா்.
தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழக்கக் கோரி, கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நடத்தினா்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், என்எல்சி அதிகாரிகள் மற்றும் நிரந்தரத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதுபோல, என்எல்சி உற்பத்தியில் பெரும் பங்காற்றி வரும் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை சத்தியாகிரக போராட்டம் அறிவித்திருந்தனா்.
அதன்படி, நெய்வேலி கீயூ பாலம் அருகே புதன்கிழமை திரண்ட சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுரங்க நிா்வாக அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தினா்.
இதையடுத்து, புதன்கிழமை முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது.