கடலூா் மாவட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும் தோ்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை சரிபாா்ப்பு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட தோ்தல் அலுவலரும், கடலூா் மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை அன்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்ன்ா் அவா் கூறியதாவது: தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் படி கடலூா் மாவட்டத்தில் நவ.4-ம் தேதி முதல் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தன்னாா்வலா்கள், அரசுப் பணியாளா்கள் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படிவங்கள் சரிபாா்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக தோ்தல் ஆணையத்தால் நீட்டிப்பு செய்யப்பட்ட டிச.14-ம் தேதிக்குள் முடித்திட வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
12சிஎம்பி9: பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்த கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்