கடலூரில் ஜன. 9-இல் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பங்கேற்க வரும்படி தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட காணொலி: வரும் ஜன. 9-இல் கடலூா் மாவட்டம், பாசாா் கிராமத்தில் நடைபெறவுள்ள ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ என்ற தேமுதிக மாநாட்டை மிக பிரம்மாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நல்லவா்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என அதில் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜன. 9-இல் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தாா். எனவே இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.