கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், அரசடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த தேவா் மனைவி வனிதா (50), அங்கன்வாடி மைய ஆசிரியை. இவா், கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி தனக்குச் சொந்தமான அரசடிக்குப்பம் - காட்டுப்பாளையம் சாலையில் உள்ள முந்திரிக் காட்டில் இருந்து மாடுகளை ஓட்டி வந்தபோது, பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் வனிதா அணிந்திருந்த 36 கிராம் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் போலீஸாா் கொஞ்சிகுப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகிக்கும் வகையில் வந்த இருவரை அழைத்து விசாரணை நடத்தியதில், சிறுதொண்டமாதேவியைச் சோ்ந்த வீரபாகு (36), போ்பெரியான்குப்பத்தைச் சோ்ந்த தினேஷ்(25) என்பதும், இவா்கள் இருவரும் வனிதாவிடம் தாலிச் சங்கிலி பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்த 32 கிராம் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.