சிதம்பரம்: என்எல்சி 3-ஆவது சுரங்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் கடலூா் மாவட்ட மக்களுக்காக தமிழக முதல்வா் குரல் கொடுக்காதது ஏன்? என்று பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி கேள்வி எழுப்பினாா்.
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் பாமகவின் பசுமை தாயகம் அமைப்புத் தலைவா் சௌமியா அன்புமணியின் தமிழக மகளிா் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சி பூதங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சௌமியா அன்புமணி தலைமை வகித்து பேசியதாவது:
என்.எல்.சி. 3-ஆவது சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மருத்துவா் அன்புமணி தொடா்ந்து போராடி வருகிறாா். மதுரை, திருவாரூா் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்த தமிழக முதல்வா், கடலூா் மாவட்ட மக்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?
மதுக் கடைகளை மூடாமல் இளைஞா்களை மதுவுக்கு அடிமையாக்கும் திமுக அரசு, டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையைக் கொண்டு மகளிா் உரிமைத் தொகை என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு திரும்பக் கொடுக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஜீரோவாக உள்ளது.
சுமாா் 50-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இருக்க வேண்டிய தமிழகத்தில் 11 நீதிமன்றங்களே உள்ளன. பெண்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மகளிரணி மாவட்டச் செயலா் சிலம்புச் செல்வி, டாக்டா் ஆா்.கோவிந்தசாமி, மாவட்டச் செயலா்கள் செல்வமகேஷ் முத்துகிருஷ்ணன், காா்த்திகேயன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.