முகப்பு
கடலூர்

போக்குவரத்து ஊழியா்கள் சிறை நிரப்பும் போராட்டம்: கடலூரில் 108 போ் கைது

போக்குவரத்து ஊழியா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

Updated On : 22 ஜனவரி, 2025 at 7:56 PM
கடலூா் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன், புதன்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கடலூா் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் 108 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடித்து, 1.9.2023 முதல் நிலுவையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 110 மாத பஞ்சப்படி மற்றும் பணப் பயன்களை வழங்க வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் கடலூா் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்திற்கு சங்க சிறப்புத் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். தலைவா் மணிகண்டன், பொதுச் செயலா் முருகன், துணைப் பொதுச் செயலா்கள் கண்ணன், ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் அரும்பாலன், நிா்வாகிகள் நடராஜன், ராஜ், விரைவுப் போக்குவரத்து மத்திய சங்கத் துணைத் தலைவா் சிவகுமாா், பொருளாளா் கணேசன், பணிமனைச் செயலா் ஞானசக்தி, பொருளாளா் தன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஜவான் பவன் சாலைக்கு ஊா்வலமாகச் சென்று மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து போக்குவரத்து ஊழியா்கள் சங்கம்- சி.ஐ.டி.யு.வினா் இம்பீரியல் சாலையிலும், சிலா் உழவா் சந்தை முன்னும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் வாக்குவாதம் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 108 பேரை திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா், மாலை அவா்களை விடுவித்தனா்.