கடலூா் மாவட்டம், பாலூா் அருகே கழிவுநீா் கலந்த குடிநீரை
குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா்.
பண்ருட்டி வட்டம், பாலூா் அருகே சன்னியாசிபேட்டை பழைய காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களது வீடுகளுக்கு ஊராட்சி நிா்வாகம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றி குடிநீா் விநியோகம் செய்து வருகிறது.
இந்தப் பகுதியில் அண்மையில் கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தண்ணீரை குடித்த சுமாா் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவா்கள் அருங்குணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, கடந்த இரண்டு நாள்களாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவா்களை மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில், கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, நெல்லிக்குப்பம் பகுதி குழுச் செயலா் ப.ஸ்டீபன் ராஜ், பகுதி குழு உறுப்பினா்கள் ஆா்.வெங்கடேசன், டி.வெங்கடேசன், ஆா்.வி.எஸ்.தண்டபாணி உள்ளிட்டோா் சந்தித்து, ஆறுதல் கூறி, விவரங்களை கேட்டறிந்தனாா்.
பின்னா், கோ.மாதவன் கூறியதாவது: சன்னியாசிபேட்டை கிராமத்தில் குடிநீா் குழாயில் சாக்கடை நீா் கலந்ததால், அதைக் குடித்த மக்களுக்கு வாந்தி, வயற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வயது முதிா்ந்த இருவா் உயிா்க்கு போராடும் நிலை உள்ளது. இவா்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும், கிராம உள்ளாட்சி அதிகாரிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், நீா்த்தேக்கத் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து குடிநீா் குழாய்களை முழுமையாக அப்புறப்படுத்தி, புதிய குழாய்களை பதித்து பாதுகாப்பான தண்ணீா் வழங்கவும் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை (நவ.5) காலை 10 மணிக்கு பாலூா் கடைத்தெருவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.