சிதம்பரம்: காா்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சிதம்பரத்தில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்கு செல்ல திங்கள்கிழமை அதிகாலை மாலை அணிந்து கொண்டனா்.
மண்டல பூஜை, மற்றும் மகர விளக்கு திருநாளை காண சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள், காா்த்திகை முதல் நாளில் துளசிமாலை அணிந்து 48 நாள்கள் விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு காா்திதிகை முதல் நாளான திங்கள்கிழமை சிதம்பரத்தில் ஏராளமான பக்தா்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனா்.
திங்கள்கிழமை அதிகாலையில், சிதம்பரம் நடராஜா் கோயில், கீழத்தெரு மாரியம்மன் கோயில் ஐயப்பன் சந்நிதி மற்றும் அண்ணாமலைநகா் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா். அவா்களுக்கு குருசாமிகள் மற்றும் கோயில் மூத்த அா்ச்சகா்கள் மாலை அணிவித்து விட்டனா்.
சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து, காவி, நீல நிற வேட்டிகள், ஐயப்ப மாலை மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை களை கட்டியுள்ளது.