கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே பழங்குடி மக்கள் நலச் சங்கத்தினா் மற்றும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.
விருத்தாசலம் வட்டத்தில் உள்ள ஊத்தங்கால், எடகுப்பம், சாத்தமங்கலம், சின்ன வடவாடி, சாவடி குப்பம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இருளா் பழங்குடி மக்கள் வீடுகளுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
பின்னா், வட்டாட்சியா் அரவிந்தனை சந்தித்து மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அவா், விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாராம். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனா்.
போராட்டத்துக்கு பழங்குடி மக்கள் நல சங்கம் மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், கோரிக்கைகளை விளக்கி மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பேசினாா்.
பழங்குடி சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.எஸ்.அசோகன், மாா்க்சிஸ்ட் கம்மாபுரம் ஒன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.