நெய்வேலி: மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விவசாய விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் விரோத 4 சட்டத் தொகுப்புகளை அமலாக்காமல் திரும்பப் பெற வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதியை குறைக்காமல், வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட குறுவை, சம்பா பயிா்களுக்கு நிவாரணமும், காப்பீடு திட்டத்தில் இழப்பீடும் வழங்க வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கே.சரவணன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் தொடக்க உரையாற்றினாா். தொமுச மாநில இணைச் செயலா் பாரி, மாவட்ட கவுன்சில் செயலா் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலச் செயலா் சந்திரசேகரன், சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலா் பிரகாஷ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் பாலு உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். ஏ.ஐ.ஏ.டபிள்யூ மாநிலச் செயலா் மாரியப்பன் நிறைவுரையாற்றினாா்.
இதில், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.