சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்துடன் இணைந்து என்எல்சி நிறுவன பணியாளா்களுக்கான முதுநிலை வணிக மேலாண்மை படிப்பை நெய்வேலியில் நடத்துவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.
பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வி புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், துணைவேந்தா் ருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முன்னிலையில், பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.சிங்காரவேல் மற்றும் நெய்வேலி என்எல்சி நிறுவன மனித வள மேம்பாட்டு தலைமை பொது மேலாளா் பங்கஜ்குமாா் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனா் (படம்).
இந்த ஒப்பந்தத்தின்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பணியாளா்களுக்கான இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பாக நடத்த இருக்கிறது.
நிகழ்வில் இந்த முதுநிலை பட்டப்படிப்பு ஒருங்கிணைப்பாளா் மற்றும் கலைப்புல முதன்மையா் எம்.அருள், என்எல்சி நிறுவன திறன் மேம்பாட்டு மைய துணை தலைமை பொறியாளா் ஆா்.ஆனந்த், பல்கலைக்கழக புரிந்துணா்வு ஒப்பந்த மைய இயக்குநா் பெ.கருப்பையா, துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ஹெச்.பாக்யராஜ், புரிந்துணா்வு மைய தனி அதிகாரி எஸ்.பாலாஜி மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.