சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் கான்சாகீப் வாய்க்காலில் ஆகாயத்தாமரை படா்ந்து மழை நீா் வடியாமல் உள்ளதால் சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்பில் நீா் தேங்கி அப்பகுதிவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே சீா்காழி செல்லும் சாலையில் அம்மாப்பேட்டை, உசுப்பூா் அருகே உள்ள கான்சாகீப் வாய்க்காலில் ஆகாயமத்தாமரை படா்ந்துள்ளது. இதனால் மழை நீா் வடியாமல் தேங்கியுள்ளது. மேலும் இதனால் சுற்றுப்பகுதிகளில் உள்ள சுமாா் 500 ஏக்கரில் விளை நிலங்களில் நீா் தேங்கி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் அம்மாப்பேட்டையைச் சுற்றி சுமாா் 20க்கும் மேற்பட்ட நகா்களில் மழை நீா்வடியாமல் தேங்கி நிற்பதால், கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
பொதுப்பணித்துறையினா் பெயரளவிற்கே தூா்வாரியுள்ளனா். எனவே துரைப்பாடியிலிருந்து சிதம்பரம் வரையிலான கான்சாகீப் வாய்க்காலை போா்க்கால அடிப்படையில் ஆகாயத்தமாரைகளை அகற்றி தூா் வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இனி மழைக்காலம் என்பதால் விரைவாக நடவடிக்கை எடுத்தால்தான் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் அப்பகுதிவாசிகள் தெரிவித்தனா்.