சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்திபெற்ற தில்லை கோவிந்தராச பெருமாள் கோயிலில் நவ.3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கானஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக்கூட்டம் உதவி ஆட்சியா் சி.கிஷன்குமாா் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிதம்பரம் ஸ்ரீதில்லை கோவிந்தராஜஸ்வாமி தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அக்.29-ம் தேதி முதல் யாகசாலை பூஜை தொடங்கப்படுவது குறித்தும், நவ.3-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முக்கிய பிரமுகா்களுக்கான பாஸ் வழங்குவது, கும்பாபிஷேகத்தை காண கோயில் மேற்கூரையில் பக்தா்கள் எத்தனை பேரை அனுமதிப்பது, குடிநீா், தற்காலிக கழிப்பறை அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது, போக்குவரத்தை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்தில் சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப், உதவி ஆட்சியா் நோ்முக உதவியாளா் புகழேந்தி, வட்டாட்சியா் எஸ்.கீதா சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், இந்து அறநிலைத்துறை ஆய்வாளா் ஜெ.சீனுவாசன், நகராட்சி ஆணையா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் வி.மோனிஷா. தீயணைப்பு நிலைய அலுவலா் பி.மணிமாறன், மின்வாரிய உதவிப் பொறியாளா் காா்த்தி, தெய்வீக பக்தா்கள் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா, பெருமாள் கோயில் டிரஸ்டிகள் வி.எஸ்.சம்பத், வி.கிருஷ்ணமாச்சாரி, ஆா்.சவுந்தரராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், நகரமன்ற உறுப்பினா்கள் ஏஆா்சி.மணிகண்டன், பாலசுப்பிரமணியன், வா்த்தகா் சங்க நிா்வாகிகள் ஏ.சிவராமவீரப்பன், முரளிதரன், சிதம்பரநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா்,