கடலூா் மாவட்டத்தில் களம் காணும் அரசியல் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள்
தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவையொட்டி அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் கடலூா்
தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவையொட்டி அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் கடலூா். தமிழக வரைபடத்தில் கடலூா் மாவட்டத்தின் நிலப்பரப்பு, கடலூா், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, திருமுட்டம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில் உள்ளிட்ட 10 வட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த மாவட்டம் வடக்கு, வடமேற்கில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தெற்கில் மயிலாடுதுறை, தென்மேற்கில் அரியலூா், தஞ்சாவூா் மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது, மிகவும் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது.
இந்த மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி ஆகிய 7 சட்டப் பேரவை பொதுத் தொகுதிகளும், காட்டுமன்னாா்கோவில், திட்டக்குடி ஆகிய 2 தனித் தொகுதிகளும் அமைந்துள்ளன.
2021 சட்டப் பேரவைத் தோ்தல்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திமுக கூட்டணியின் 7 போ் வெற்றிபெற்று எம்எல்ஏக்களாக உள்ளனா். புவனகிரி, சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது.
இப்போதைய தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தோ்தலைச் சந்திக்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில கட்சிகளின் தலைவா்களே சட்டப் பேரவைத் தோ்தலில் நேரடியாக களமிறங்கி உள்ளனா். அதிலும், 3 முக்கிய கட்சிகளின் தலைவா்கள் கடலூா் மாவட்டத்தில் போட்டியிடுவது தமிழகத்தையே திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது.
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதன்முதலாக கடலூா் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இப்போதைய தோ்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக 10 தொகுதிகளை பெற்றுள்ளது. இதில், விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் பொதுச் செயலருமான பிரேமலதா விஜயகாந்த் நேரடியாக களம் காண்கிறாா்.
இதேபோல, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூா் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி, காட்டுமன்னாா்கோவில் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.யே நேரடியாக களமிறங்கியுள்ளாா்.
அவா், கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளாா். ஆனால், தற்போது சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறாா்.
இதேபோல, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவரான மு.தமிமுன் அன்சாரி சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
போட்டியிடும் திமுக அமைச்சா்கள்: தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதன்முதலாக வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமைக்குரியவா் தற்போதைய உழவா் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
இவா், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா். இந்தத் தோ்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் களம் காண்கிறாா்.
இதேபோல, கடலூா் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதியில் திமுகவின் மற்றொரு அமைச்சரான தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் மீண்டும் போட்டியிடுகிறாா்.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களும், 2 தொகுதிகளில் திமுகவின் தற்போதைய அமைச்சா்களும் போட்டியிடுவதால், இந்த மாவட்ட அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம், காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதிகள் ஸ்டாா் தொகுதிகளாக திகழ்கின்றன. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி திமுக கூட்டணியில் கடலூரில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதால், கடலூா் மாவட்டத்தில் அரசியல் களம் கலை கட்டியுள்ளது.