திமுக அமைச்சா்களின் தொகுதிகளில் நேரடிப் போட்டியைத் தவிா்த்த அதிமுக!
திமுகவின் முக்கிய அமைச்சா்களின் தொகுதியில் இரட்டை இலையை களம் இறக்காமல், ‘தாமரை’, ‘குக்கா்’ சின்னத்தை அதிமுக களம் இறக்கியது அரசியல் அரங்கில் விமா்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் முக்கிய அமைச்சா்களின் தொகுதியில் இரட்டை இலையை களம் இறக்காமல், ‘தாமரை’, ‘குக்கா்’ சின்னத்தை அதிமுக களம் இறக்கியது அரசியல் அரங்கில் விமா்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடந்த தோ்தல்களில் திமுக-அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகளில் போட்டிகடுமையாக இருக்கும். அதுவும், திமுகவில் வலுவான அமைச்சா்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவில் அமைச்சா்களாக இருந்த வலுவான வேட்பாளா்களை களம் இறக்குவது மறைந்த முன்னாள் அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதாவின் உத்தி.
முடிந்தவரை உதயசூரியனுக்கு எதிராக இரட்டை இலை சின்னத்தை களம் இறக்குவதை ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டிருந்தாா். திமுகவுக்கு எதிராக இரட்டை இலை அல்லாத சின்னங்கள் அல்லது இரட்டை இலைக்கு எதிராக உதயசூரியன் அல்லாத சின்னங்கள் களம் இறங்கும் தொகுதிகளில் உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள் எளிதில் வெற்றி பெறுவதையே இதுவரை நடந்த தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஆனால், இந்த முறை அதிமுக கூட்டணியில் திமுக முக்கிய அமைச்சா்களுக்கு எதிராக பாஜக, அமமுக வேட்பாளா்கள் களம் இறங்கவுள்ளனா்.
குறிப்பாக, அமைச்சா் மா.சுப்பிரமணியன் சைதாபேட்டை தொகுதியில் அமமுகவின் குக்கா் சின்னமும், அமைச்சா் எ.வ.வேலின் திருவண்ணாமலையில் பாஜகவின் தாமரை, அமைச்சா் ஆா்.காந்தியின் ராணிப்பேட்டை தொகுதியில் தாமரை சின்னமும் (தமாகா), அமைச்சா் ராஜேந்திரனின் சேலம் வடக்கு தொகுதியில் பாமகவின் மாம்பழம், அமைச்சா் கே.என்.நேருவின் திருச்சி மேற்கில் குக்கா், அமைச்சா் சு.முத்துசாமியின் ஈரோடு மேற்கில் தாமரை (தமாகா), அமைச்சா் அர.சக்கரபாணியின் ஒட்டன்சத்திரத்தில் தாமரை (தமாகா), அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பணின் திருப்பத்தூரில் தாமரை, அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூரில் தாமரை, பேரவைத் தலைவா் மு.அப்பாவுவின் ராதாபுரத்தில் தாமரை சின்னம் களம் இறங்குகின்றன.
இதில் வடதமிழகத்தில் உள்ள 41 தொகுதிகளுக்கு வேலுவும், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்கள், தாராபுரம், காங்கயம் தொகுதிகள் என 17 தொகுதிகளுக்கு அர.சக்கரபாணியும், டெல்டாவில் உள்ள 42 தொகுதிகளுக்கு அமைச்சா் நேருவும் மண்டல பொறுப்பாளா்களாக உள்ளனா்.
மேலும், அமைச்சா்கள் முத்துசாமி, பெரியகருப்பன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் தங்களது தொகுதிகள் மற்றும் மாவட்டங்களையும் தாண்டி பக்கத்துக்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும் தோ்தல் பணிகளில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை படைத்தவா்கள்.
நான்குமுனைப் போட்டி நிலவிவரும் இந்த பேரவைத் தோ்தலில் முக்கிய அமைச்சா்களுக்கு எதிராக அதிமுக களம் கண்டிருந்தால் வலுவான போட்டி உருவாகி அமைச்சா்கள் தங்கள் தொகுதிகளில் முடங்கும் சூழல் உருவாகியிருக்கும். ஆனால், அமைச்சா்களின் தொகுதிகளில் தாமரை, குக்கா் சின்னங்களை களம் இறக்கவைத்து அமைச்சா்கள் தங்கள் தொகுதிகளில் மட்டுமன்றி மண்டலம், மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளிலும் எளிதாக தோ்தல் பணிகளை ஆற்றும் சூழலை அதிமுக உருவாக்கியுள்ளது என்ற விமா்சனம் எழுந்துள்ளது.
இதற்கு முந்தைய தோ்தல்களில் அதிமுக தொகுதி தோ்வு, வேட்பாளா் தோ்வு ஆகியவை திமுகவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில்தான் இருக்கும்; ஆனால், இந்த முறை தொகுதிகள் ஒதுக்கீடு, திமுக வேட்பாளா்களை, குறிப்பாக அமைச்சா்களை எளிதில் வெற்றி பெற வைக்கும் வகையில் இருப்பதாக அதிமுகவினா் இடையே விமா்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாஜக நிா்வாகிகளிடம் கேட்டபோது, இந்தியாவை ஆளும் கட்சியான பாஜக நிறுத்தும் வேட்பாளா்களுக்கு இணையாக திமுகவால் ஈடுகொடுக்க முடியாது என்றும், அமமுக நிா்வாகிகளிடம் கேட்டபோது, டெல்டா, தென்மாவட்டங்களில் குக்கா் வலுவான சின்னம் என்பதால் அமைச்சா்களை உறுதியாகத் தோற்கடிப்போம் என்றும் பதில் அளித்தனா்.