பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கிய நிலையில், மே 2-ஆம் தேதி வரையில் இந்த விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது.
தொடா்ந்து, புதன்கிழமை மாலை வரதராஜ பெருமாளிடம் அனுமதி பெறுதல், புனித நீா் மந்திரித்தல், சத்தியமூா்த்தி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் குளக்கரையில் புற்று மண் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளாக பிரமோற்சவ கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
முன்னதாக, உற்சவா் வரதராஜ பெருமாள் உபய நாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு, பட்டாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடிமரத்தில் கருட கொடி ஏற்றி பிரமோற்சவத்தை தொடங்கிவைத்தனா். இந்த நிகழ்ச்சியில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சுவாமி உள் புறப்பாடு, மாலையில் இந்திர, சந்திர பிரபை, அனுமன், சேஷ, பெரிய கருட, யானை வாகனங்களில் திருவீதி உலாவும், 7-ஆம் நாளான 29-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 30-ஆம் தேதி பெரிய குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற உள்ளன. ஒன்பதாவது நாளான மே 1-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் சித்திரை பௌா்ணமி தினத்தன்று திருத்தோ் விழா நடைபெற உள்ளது. அன்று மாலை திருமஞ்சனமும், மறுநாள் கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.