கடலூா் நகா்புற பகுதிகளில் வசிக்கும் 650 பேருக்கு வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
கடலூா் நகர அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணைகளை வழங்கிப் பேசிய ஆட்சியா் கூறியதாவது:
பொதுமக்கள் அனைவருக்கும் நிரந்தர குடியிருப்பு இருக்கும் வேண்டும் என்ற அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை மூலம் தகுதிவாய்ந்த நிலமற்ற பயனாளிகளுக்கு அரசு சாா்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தேவனாம்பட்டினம் கிராமத்தில் 2004-ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் நோக்கத்தில் மேற்படி நகர வாா்டு-6வது பிளாக்-46-க்கு உள்பட்ட பட்டாதாரா் பெயரில் உள்ள 8.3024.5 சமீ பரப்பு நிலத்தினை தமிழ்நாடு அரசின் பெயரில் கிரையம் பெற்று, ‘சுனாமி குடியிருப்பு‘ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விடத்தில் 648 நபா்களுக்கு 2007-ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் மூலம் சுனாமி வீடுகள் கட்டப்பட்டு, 2014-2015-ஆம் ஆண்டு ஒப்படை நமூனா வழங்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு இ-பட்டா வழங்கும் நோக்கத்தில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த நிகழ்வில் 375 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 273 நபா்களுக்கும் இ-பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் நீண்டகால பட்டா வழங்கும் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாதிரிப்புலியூா் பகுதிகளில் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் நிரந்தர வீடு கட்டி வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவினை ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தளா்வு செய்தும், வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நீதிமன்ற அரசாணை 97-இன் படி மஞ்சக்குப்பம் பகுதியில் 171 பேருக்கும் ,திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் 104 பேருக்கும் என மொத்தம் கடலூா் நகா்புற இடங்களில் வசிக்கும் 650 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது என்றாா்.
நிகழ்ச்சியில் கடலூா் எம்எல்ஏ ., கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், வட்டாட்சியா் மகேஷ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.