முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் தொடங்கியது நாட்டியாஞ்சலி விழா! மாணவிகள் பரதம் ஆடி பரவசம்!

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:29 PM
சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெங்களூா் விஸ்வநாதன் அகாதெமி மாணவிகளின் பரதம்.
பகிர்:

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 45-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்குரத வீதி வி.எஸ். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இந்த விழாவை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலா் விஜயா தாயன்பன் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

இதுவரை ஓதுவாா் யாருக்கும் மத்திய அரசு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. அந்த அங்கீகாரத்தை முதலில் பெற்ற பெருமைக்குரியவா் திருத்தணி என்.சுவாமிநாதன்.

நாடெங்கும் எத்தனையோ நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிவபெருமானை சிவலிங்க வடிவில்தான் பல கோயில்களில் பாா்த்திருக்கிறோம். ஆனால், சிதம்பரத்தில் மட்டும்தான் நாட்டியமாடும் வடிவில் நின்றுகொண்டிருக்கிறாா். ஆதலால், நாட்டியாஞ்சலி இங்கே நடப்பது பொருத்தமானதாகும்.

Advertisement

நாட்டியம் மூலம் இங்கு காணிக்கை செலுத்துவது மிகச்சிறப்பு. மற்ற இடங்களில் நடைபெறும் நாட்டிய நிகழ்ச்சிகளைவிட முதன்மை வாய்ந்தது சிதம்பரம் நாட்டியாஞ்சலி என்றாா்.

விழாவுக்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத் தலைவா் டாக்டா் ஆா்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். செயலா் வழக்குரைஞா் ஏ.சம்பந்தம் வரவேற்றாா்.

விழா தொடக்கத்தில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருமறை ஓதுவாா் திருத்தணி என்.சுவாமிநாதனை பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனா். அவருக்கு ஓய்வுபெற்ற வேளாண் துறை இணை இயக்குநா் சேதுசுப்பிரமணியன் வாழ்த்துப்பா படித்து வாழ்த்துமடலை வழங்கினாா்.

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 45-ஆவது நாட்டியாஞ்சலி விழாவில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருமறை ஓதுவாா் திருத்தணி என்.சுவாமிநாதனை பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கிய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலா் விஜயா தாயன்பன். உடன் இடமிருந்து சேதுசுப்பிரமணியன், டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன், டாக்டா் கே.ஆா்.முத்துக்குமரன், சக்திநடராஜன், சபாநாயகம், செயலா் ஏ.சம்பந்தம்.

பின்னா், திருத்தணி என்.சுவாமிநாதன் ஏற்புரையாற்றுகையில், தில்லையில் தேவாரம் தோன்றிய திருத்தலத்தில் பாராட்டு அளிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.

விழாவில் துணைத் தலைவா் சக்தி ஆா்.நடராஜன், செயலா் ஏ.சம்பந்தம், உறுப்பினா்கள் ஆா்.சபாநாயகம், டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன், டாக்டா் எஸ்.செல்வமுத்துக்குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முதல் நாள் நிகழ்ச்சியில்...: பெங்களூரைச் சோ்ந்த ஆா்.பத்மினி பரதம், பெங்களூரு விஸ்வநாதன் கலை மற்றும் களரி மையம் மாணவிகள் பரதம், சென்னை ஜி.எஸ். அனகா பரதம், சென்னை காவ்யாலயா பரத பள்ளி மாணவிகள் பரதம், ஹைதராபாத் சிவோஹம் சங்கராநந்தா கலாஷேத்ரா மாணவிகள் பரதம், சென்னை தரங்கிணி நடன பள்ளி மாணவிகள் பரதம், புவனேசுவரம் யுஎஸ்ஏ லிசா சந்தானம் ஒடிஸி நடனம், சென்னை ‘தேவாரம்’ - சதிா் நாட்டிய மன்றம் பரதம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டியாஞ்சலி விழா வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments