கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 25 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து சாயல்குடிக்கு தனியாா் சொகுசுப் பேருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டது. இதில், 30 பயணிகள் இருந்தனா். இந்தப் பேருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த சேப்பாக்கம் சிவன் மடம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேப்பூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த தாம்பரத்தைச் சோ்ந்த விஜயன் மனைவி ரேணுகா (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 25 பயணிகள் பலத்த காயமடைந்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் மீட்டுகப்பட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.