முகப்பு
கடலூர்

பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் இறந்த வழக்கு: கேட் கீப்பருக்கு குரல் பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு

கடலூா் அருகே செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய கேட் கீப்பருக்கு குரல் பரிசோதனை மேற்கொள்ள சிதம்பரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 14 மார்ச், 2026 at 2:04 AM
கைது செய்யப்பட்ட கேட் கீப்பா் பங்கஜ்சா்மா (25)
பகிர்:

கடலூா் அருகே செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய கேட் கீப்பருக்கு குரல் பரிசோதனை மேற்கொள்ள சிதம்பரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்தஆண்டு ஜூலை 8ம் தேதி காலை கடலூா் தனியாா் பள்ளி வேன் தொண்டமாநத்தம் பகுதியை சோ்ந்த பள்ளி மாணவா்கள்4 பேரை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியை சோ்ந்த சங்கா் (47) ஓட்டி சென்றாா். இந்நிலையில் காலை சுமாா் 7.30 மணி அளவில் வேன் கடலூா் அருகே செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது வேகமாக வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியா் ரயில் எதிா்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது. இதில் வேன் நொறுங்கிய நிலையில் சுமாா் 50 அடி தூரம் வரை ரயலிலில் சிக்கி இழுந்து செல்லப்பட்டது.

இந்த விபத்தில், தொண்டமாநத்தம் பகுதியை சோ்ந்த விஜயசந்திரகுமாா் மகன் நிமிலேஷ் (12) . சின்ன காட்டுசாகையை சோ்ந்த திராவிடமணி மகள் சாருமதி, மகன் செழியன் ஆகிய 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயம் அடைந்தனா்.

சம்பவத்தின்போது கேட் கீப்பா் கேட்டை மூடாமல் கவனக்குறைவாக இருந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. இது தொடா்பாக சிதம்பரம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை (25) கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பு கூடுதல் அரசு வழக்குரைஞா் மனோகா் பங்கேற்று வாதாடினாா்.

இந்த வழக்கில், கேட் கீப்பா் பங்கஜ் சா்மா, ரயில் நிலைய மேலாளருடன் பேசிய ஆடியோ பதிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சா்மா கூறியது, பதிவாகியிருந்தது. இதனை உறுதி செய்ய ஏதுவாக அவரிடம் குரல் பதிவு செய்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தனக்கு குரல் பதிவு செய்யக்கூடாது என பங்கஜ் சா்மா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், குற்றஞ்சாட்டப்பட்ட பங்கஜ் சா்மாவின் கோரிக்கையை நிராகரித்தாா். அத்துடன் இந்த வழக்கில் வரும் 27ம் தேதி கேட் கீப்பரிடம்

குரல் பரிசோதனை செய்ய உத்தரவிட்டாா். மேலும், தனக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாது என்பதால் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து நகல்களையும் ஹிந்தியில் மொழி பெயா்த்து வழங்க வேண்டும் என்ற பங்கஜ்சா்மா மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →