100 சதவீதம் வாக்குப்பதிவு: விழிப்புணா்வு ஆட்டோ பேரணி
100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையில், கடலூரில் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையில், கடலூரில் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கடலூா் நகர அங்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் ஏப். 23 -இல் நடைபெறவுள்ளது. தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்திட தேவையான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம், கல்லூரிகள் போன்ற வாக்காளா்கள் அதிகம் உள்ள இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றல், கையெழுத்து இயக்கம், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
புதன்கிழமை பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வாக்கு வில்லைகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. வாக்காளா்கள் எவ்வித அச்சுறுத்தலின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் மகேஷ், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.