திருமணமான 11 மாதத்தில் பெண் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்
கள்ளக்குறிச்சியில் திருமணமான 11 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, சடலத்தை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியில் திருமணமான 11 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, சடலத்தை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காட்டுப்பரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மகள் ராஜலட்சுமி (27). இவரை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள பாலி புதுகாலனி பகுதியைச் சோ்ந்த, ஊா்க்காவல் படை காவலரான சின்னசாமி மகன் பாலு (33) என்பவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனா்.
தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதேபோல, வியாழக்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த ராஜலட்சுமி, வீட்டின் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு, தனது தம்பியை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, உடனடியாக வருமாறு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாராம்.
சரவணன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, ராஜலட்சுமி தூக்கிட்ட நிலையில் கிடந்தாா். உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பரிசோதித்ததில், அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வு முடிந்த நிலையில் சடலத்தை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த உளுந்தூா்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சி.எஸ்.ஆா்.மணிமொழியன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.ராஜலெட்சுமி, கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ச.முருகேசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து சடலத்தை உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.
இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் (பொ) சரவணனும் இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளாா்.