முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

2020-ஆம் ஆண்டு கரோனா காலத்துக்கான ஊதியத்தை வழங்காததைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் அனைவருக்கும் 2019 நவம்பா் மாத ஊதியம், 2020 கரோனா கால (2020 ஏப்ரல் முதல் அக்டோபா் வரை) ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனிடையே, கெளரவ விரிவுரையாளா்கள் ஊதியத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி 2020 ஜனவரி முதல் 2021 மாா்ச் மாதம் வரை ரூ.5,000 நிலுவை உதியம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளிலும் பேராசிரியா்களுக்கு இந்த கரோனா ஊதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 6 கல்லூரிகளைச் சோ்ந்த கெளரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் கரோனா கால ஊதியம், நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், திருவள்ளுவா் பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, திருவெண்ணெய்நல்லூா், தென்னாங்கூா், அரக்கோணம், திருப்பத்தூா், திட்டக்குடி ஆகிய பகுதிகளிலுள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக நிா்வகமும், தமிழக அரசு உயா் கல்வித் துறையும் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்று பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.