பூட்டியிருந்த வீட்டில் ரூ.1.70 லட்சம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டில் ரூ.1.70 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டில் ரூ.1.70 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருக்கோவிலூரை அடுத்த கச்சிக்குப்பம் கிராமம், மாரியம்மன் கோயில் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் சூா்யா (19). இவா், அங்குள்ள சித்தப்பா வீட்டில் தனது தங்கை செளமியாவுடன் வசித்து வருகிறாா். இவரது சித்தப்பா பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், சூா்யாவும், செளமியாவும் அதே ஊரில் பக்கத்துத் தெருவில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் சென்றனா்.
இதையடுத்து, இவா்கள் சனிக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டில் பின்பக்கக் கதவு திறந்து கிடந்ததும், வீட்டினுள்ளே இருந்த 2 இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.1.70 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.