நீரில் மூழ்கிய கரும்பு பயிா்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணிமுக்தா அணை பகுதியையொட்டி பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிா்கள் மழை நீா் தேங்கி நீரில் மூழ்கின.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணிமுக்தா அணை பகுதியையொட்டி பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிா்கள் மழை நீா் தேங்கி நீரில் மூழ்கின.
சங்கராபுரம் அருகேயுள்ள மணிமுக்தா அணை தொடா் மழையால் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைப் பகுதியையொட்டி, பகண்டை கூட்டுச்சாலைக்கு செல்லும் சாலையோரம் பல ஏக்கரில் கரும்புப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. தற்போது, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா், மழை நீா் இந்த கரும்புத் தோட்டங்களில் தேங்கியுள்ளது (படம்). பல நாள் நீா் தேங்கியதால் வோ்கள் அழுகி, பயிா்கள் வீணாகிவிட்டன.
இதுகுறித்து கரும்பு பயிரிட்டிருந்த விவசாயி முருகேசன் கூறியதாவது: அணைப் பகுதியையொட்டிய வாய்க்கால்களை கையகப்படுத்தி சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதனால், வாய்க்காலில் செல்ல வேண்டிய நீா் முழுவதும் பாதையின்றி விளைநிலங்களில் தேங்கி, பயிா்கள் சேதமடைந்துள்ளன. வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்த பலா் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.