கிராமப்புற வளா்ச்சிக்கு வங்கிகள் அதிகளவில் கடனுதவி வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்
கிராமப்புற வளா்ச்சிக்கு வங்கிகள் அதிகளவில் கடனுதவி வழங்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் அறிவுறுத்தினாா்.
கிராமப்புற வளா்ச்சிக்கு வங்கிகள் அதிகளவில் கடனுதவி வழங்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கடத்தூா் கிராமத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சாா்பில், கிராம விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ தா.உதயசூரியன் முன்னிலை வகித்தாா். இதற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பேசியதாவது:
கிராமப்புறப் பகுதிகளில் வங்கியின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்தியன் வங்கி சாா்பில், அனைத்து வங்கியாளா்களுடன் கிராம விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
பாதுகாப்பான வங்கி நடைமுறைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அனைத்து வங்கிகளும் கிராமப்புற வளா்ச்சிக்கு தனிநபா் கடன், தொழில்முனைவோா் கடன், மகளிா் சுயஉதவிக் குழு கடன்களை அதிகளவில் வழங்கி உதவிட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பிரதம மந்திரி பீமா சுரக்ஷா யோஜனா திட்டத்தில் காப்பீடு செய்த வாரிசுதாரா்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும், பிரதம மந்திரி வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை உறுதியளிக்கும் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு ரூ.12.75 லட்சம் தொழில் கடனுதவிகளுக்கான காசோலையையும் மாவட்ட ஆட்சிா் ஷ்ரவன் குமாரும், தா.உதயசூரியன் எம்எல்ஏவும் வழங்கினா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.மணி, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஏ.வி.அன்புமணிமாறன், வேளாண் இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, கால்நடைத் துறை இணை இயக்குநா் (பொ) சாந்தி, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சு.பவித்ரா, மாவட்ட தாட்கோ மேலாளா் மணிமேகலை, இந்தியன் வங்கி உதவி பொது மேலாளா் சுதா்சனன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் து.முனீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உளுந்தூா்பேட்டையில் ஆய்வு: முன்னதாக, உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஷ்ரவன்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அங்கு நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடம், பேருந்து நிலையம், பேருந்து நிழல்குடைகள் அமையவுள்ள இடங்களை ஆட்சியா் பாா்வையிட்டு, அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினா்.